×

எனது கிராமம் திட்டத்தின் மூலம் பெறப்படும் அயலக தமிழர் நிதியை பயன்படுத்த அனுமதி தந்து அரசாணை வெளியீடு

சென்னை: புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் நலன் காக்க ‘எனது கிராமம்’ என்ற திட்டத்தின் மூலம் அயலகத் தமிழர்களிடம் இருந்து பெறப்படும் நிதியை ‘நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி’ என்ற அமைப்புடன் இணைந்து செயல்படுத்தும் வகையில் அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து அரசுச் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2021 அக்டோபர் மாதம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட, வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்காக்க அறிவித்த நலத்திட்டங்களில் புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், ஊர்மக்களின் கல்வி மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் ‘எனது கிராமம்’ என்ற திட்டம் தொடங்கப்படும். இந்த திட்டத்தில் பள்ளி, மருத்துவமனை, நூலகம் போன்றவற்றுக்கான கட்டிடங்களை கட்டித் தரவும், சீரமைக்கவும் புலம் பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் இந்த திட்டத்துக்கான மென்பொருள் உருவாக்குதல் மற்றும் அது சார்ந்தபணிகளை மேற்கொள்ள மீள்ஆளுமை நிதியில் இருந்து ரூ. 25 லட்சத்து 28 ஆயிரமும், கணினி, அச்சுப்பொறி, பறி பொருட்கள் கொள்முதல் செய்யவும் ரூ.9 லட்சத்து 72 ஆயிரம் ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப் பட்டது. உலகம் முழுதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் மேற்கண்ட திட்டத்துக்கு தாங்கள் விரும்பிய பங்களிப்பு நிதியை அரசுப் பள்ளிகளுக்கு வழங்கும் போது , நம்ம ஸ்கூல், ‘நம்ம ஊரு பள்ளி’ என்ற இணைய தலைப்பில் வழங்க இந்த திட்டத்தின் செயலர் அனுமதி அளித்துள்ளார். இதற்கான பணிகள் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’யின் இணையத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்றும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக அனுமதி கேட்டு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறு வாழ்வுத் துறை ஆணையர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கருத்துருவை அரசு நன்கு பரிசீலித்து, ஏற்று அனுமதி அளித்து ஆணை வெளியிடுகிறது. அதன்படி , புலம் பெயர் தமிழர்களிடம் இருந்து அரசுப் பள்ளிகளுக்காக பெறப்படும் நன்கொடைகளை எளிதாக கண்டறியவும், பணம் செலுத்திய விவரங்களை கண்காணிக்கவும், நிதி மறு ஒத்திசைவுக்காகவும் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ என்னும் திட்டத்தின் இணைய முகப்பை ஒருங்கிணைத்து செயல்படவும், ‘எனது கிராமம்’ என்ற திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பள்ளிகளை அந்த திட்டம் முடிவடையும் வரையில் ஒருங்கிணைத்து செயல்படவும், அதற்குரிய நிதியை பரிமாற்றம் செய்யவும் ஆணையருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post எனது கிராமம் திட்டத்தின் மூலம் பெறப்படும் அயலக தமிழர் நிதியை பயன்படுத்த அனுமதி தந்து அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Ayakalaka ,CHENNAI ,Tamils ,My Village ,Namma School, Namma Uru Palli ,
× RELATED மயிலாடி சிற்பங்களுக்கு கற்கள் கிடைக்குமா? தொழிலாளர்கள் கவலை